×

தேனி மாவட்ட விசேஷங்களில் காதைப் பிளக்கும் ஓசையுடன் வெடிக்கப்படும் வெடிகள்

*கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சின்னமனூர் : தேனி மாவட்டத்தில் விசேஷங்களின் போது அதிக ஒலி தரும் வெடிகளை வெடிக்கும் கலாச்சராம் இன்னமும் தொடர்ந்து வருகிறது. கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கட்டுப்பாடின்றி அதிக ஒலி எழுப்பும் வெடிகளை வெடித்து வருகின்றனர். இதனால் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படுகிறது. மேலும் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் வெடிகளை வெடிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தேனி மாவட்டத்தில் அனைத்து குடும்ப விழாக்கள், கோயில் விழாக்கள், திருவிழாக்களை தடபுடலாக கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் அதிக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிப்பதை தொடர்ந்து வருகின்றனர்.

கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்துவதற்காக திருமணம், காதணி விழா, இல்ல விழாக்கள், கோயில் விசேஷங்கள் மற்றும் இறப்பு ஊர்வலம் என பல்வேறு நிகழ்வுகளுக்கும் வெடிகள் வெடிக்கப்பட்டு வருகிறது.காதுகளை பிளக்கும் விதமாகவும், கட்டிடங்கள் அதிரும் வகையிலான வெடிகளை வெடிப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. மேலும் அபாயகரமான வெடிகளை கையில் பிடித்து தூர எரிந்து வெடிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்வோர் இத்தகைய வெடிகளால் மிரண்டு தடுமாறி விழுகின்றனர்.

முக்கிய பிரிவு சாலைகளிலும், மெயின் ரோட்டில் உள்ள கல்யாண மண்டபங்களை ஒட்டியும் வெடிகள் வெடிக்கப்படும் போது போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், புகை மண்டலத்தால் சுவாசம் கோளாறு, மூச்சு திணறல் உள்ளவர்கள், இதய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.எல்லா விசேங்களுக்கும் பாரபட்சம் இன்றி அதிக சப்தம் எழுப்பும் வெடி கள் கட்டுப்பாடு இல்லாமல் நடு ரோட்டில் தெருக்கள் வீதிகள் என வெடிப்பது தொடர்கதையாக இருக்கிறது.

இந்த வெடி வெடிப்பது தேனி மாவட்டம் முழுவதுமே அதிக சப்தம் எழு ப்பும் வெடிகள் 10 நிமிடம் 20 நிமிடம் வரையில் வானம் சென்று வெடிப் பது தொடர்கதையாக இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வெடிகள் வெடிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மிக குறைந்தளவு சப்தத்துடன் வெடிக்கும் வெடிகள், அதிக புகை ஏற்படுத்தாத வெடிகளை வெடிப்பதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகள், நடுரோட்டில் வெடிகள் வெடிப்பதற்கு தடை அறிவிக்க வேண்டும், போலீசார் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோதமாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் வெடிகளை வெடிப்பவர்கள், கையாளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சர வெடிகள் கிடைப்பது எப்படி?

சாலைகளில், தெருக்களில் மிகப் பெரிய வெடி பாக்ஸ்களில் வைத்து சரவெடிகளை வெடிக்கின்றனர். சரவெடிகள் தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் சட்ட விரோதமாக அவற்றை விற்பனை செய்பவர்களிடத்தில் வாங்கி வந்து வெடிக்கின்றனர். 5,000 வாலா, 10,000 வாலா வெடிகள் நீண்ட நேரம் வெடிக்கின்றன. இதனால் சாலைகள், தெருக்களில் செல்வோர், வெடிகள் வெடித்து முடிவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போது அவர்கள் காதை அடைத்தபடி நிற்கின்றனர்.

அரை கிலோ மீட்டருக்கு நீளமாக வெடிகளை விரித்து வெடிக்க வைக்கும் போது போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. மேலும் அப்போது ஏற்படும் நீடித்த ஒலி மற்றும் கடும் புகையால் முதியவர்கள், குழந்தைகள், பயணிகள், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.மேலும் சட்ட விரோதமாக தயாரிக்கப்படும் அதிக ஒலி எழுப்பும் ராக்கெட் வெடிகளையும் அதிகளவில் வாங்கி வந்து வெடிக்கின்றனர். இவை கட்டுப்படுத்தப்பட்ட டெசிபல் அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதுடன், வெடி எங்கு சென்று வெடிக்கிறது என தெரியாத நிலை உள்ளது.

என்னென்ன பாதிப்புகள்?

இளைஞர்கள் கெத்து காட்டுவதற்காக அஜாக்கிரதையாக வெடிகளை வெடிப்பதால் அவை கைகளிலேயே வெடித்தும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் அருகில் விழுந்து தீவிபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் ஒலி மாசு, காற்று மாசு ஏற்படுவதால் சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. தற்போது பேப்பர் வெடிகளும் அதிகளவில் வெடிக்கப்படுகின்றன. இதனால் சாலை முழுவதும் பேப்பர்கள் சிதறி அவை காற்றுக்கு பரவும் போது சுற்றுப்புறம் மாசடைகிறது.

கரி மருந்துடன் கூடிய வெடிச் சிதறல்கள், பேப்பர்கள் சுற்றுப்புறத்தை மாசடைய செய்கின்றன. அவற்றை குழந்தைகள் தெரியாமல் எடுத்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக சப்தத்துடன் வெடிகளை வெடிப்பதால் இதய நோய்கள் உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் பாதிப்படைகின்றனர். மேலும் வெடிக்கும் போது அருகில் உள்ளவர்களுக்கு காது கேட்பதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

The post தேனி மாவட்ட விசேஷங்களில் காதைப் பிளக்கும் ஓசையுடன் வெடிக்கப்படும் வெடிகள் appeared first on Dinakaran.

Tags : Theni district ,Chinnamanur ,Kalacharam ,
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!